வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (டிசம்பர் 7) இரவு 11.30 அளவில் புயலாக வலுப்பெற்றது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில், தற்போது வேகம் குறைந்து கடந்த 3 மணி நேரமாக 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது புயல் காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 530 கி.மீ தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மேலும் டிசம்பர் 10 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் உருவானதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள எண்ணூர். புதுச்சேரி, பாம்பன், கடலூர், நாகை, காரைக்கால், தூத்துக்குடி, சென்னை மற்றும் காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
டிசம்பர் 8 ஆம் தேதியான இன்று தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி கன மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்.
நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோனிஷா