வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று (டிசம்பர் 10) அதிகாலை கரையைக் கடந்தது.
மாண்டஸ் புயல் நேற்று (டிசம்பர் 9) தீவிர புயலாக இருந்து புயலாக வலுவிழந்தது. தொடர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வந்த மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
காற்றின் வேகம் குறைந்து 80 கி.மீ வேகத்தில் புயல் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
,”இன்று (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணியளவில் புயலின் மையப்பகுதி கரையைக் கடந்துள்ளது.
புயல் கரையை கடந்த போது சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. நுங்கம்பாக்கத்தில் 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியது
மேலும், இன்று காலை புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது . பின்னர் தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட உள் மாவட்டங்கள் வழியாகக் கடந்து செல்லும். இதன் காரணமாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று கூறினார்.
சென்னையில் அதிகபட்சமாகக் காட்டுப்பாக்கத்தில் 16 செ.மீ, வில்லிவாக்கத்தில் 6 செ.மீ, புழல் 10 செ.மீ, பூவிருந்தவல்லி 10 செ.மீ, பள்ளிக்கரணை 7 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனவும் பேசினார்.
மேலும் புயல் கரையை கடந்திருந்தாலும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து காற்று வீசிக் கொண்டிருக்கிறது.
இன்று மதியம் வரை பரவலாக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோனிஷா