வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மை மணத்தக்காளிக்கு உண்டு. மேலும் வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் மணத்தக்காளியில் வற்றல் செய்து வைத்துக்கொண்டால் தேவையானபோது பயன்படுத்தி பலன் பெறலாம்.
என்ன தேவை?
மணத்தக்காளிக் காய் – 200 கிராம்
தயிர் – ஒரு கப்
உப்பு – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
மணத்தக்காளிக்காயை சுத்தம் செய்து கழுவி, தயிர், உப்புடன் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் மணத்தக்காளிக்காயை ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் காய விடவும். மாலையில் மீதமுள்ள தயிரில் போட்டு மூடி வைக்கவும்.
தயிர் வற்றும் வரை மணத்தக்காளியை ஊற வைத்து வெயிலில் காய வைக்கவும். இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காய வைத்து எடுக்கவும். இந்த மணத்தக்காளி வற்றலை சிறிது நெய்விட்டு பொரித்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட வயிற்று வலி மற்றும் வயிற்றுப் புண் ஆறி விடும்.
இந்த வற்றலை எந்தக் காயைக் கொண்டும் செய்யும் புளிக்குழம்பில், தாளிக்கும்போது சேர்த்துக்கொண்டால், குழம்பு மணமாகவும் நல்ல சுவையுடனும் இருக்கும்.