மத்திய சென்னை மற்றும் வடசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (செப்டம்பர் 12) திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். பின்னர் இன்று விடியற்காலையில் மின்சாரம் திரும்பவந்தது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் “ சென்னையின் முக்கியமான மின்சார மையமான மணலி துணை மின் நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 12) இரவு சுமார் 09:58 மணி அளவில், மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும் எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது, ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது.
தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
மின் தடை காரணமாக, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது.
நள்ளிரவு 2 மணியளவில் சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது. மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் ஏற்பட்ட சேதங்களைப் போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறேன்.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அன்னபூர்ணா உரிமையாளரை மன்னிப்பு கேட்க வைப்பதா? – கொந்தளித்த கனிமொழி, ஜோதிமணி
ஆண்டுக்கு ஆயிரம் கோடி வருவாய்… தென்னிந்தியாவில் இருந்து இடம் பிடித்த ஒரே ரயில் நிலையம்!
இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்தவர்: யார் இந்த காம்ரேட் சீதாராம் யெச்சூரி?