ஆயிரத்தில் ஒரு யானைக்கு இருக்கும் சிறப்பு கொண்டதாக இருந்தது புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் பெண் யானை லட்சுமி.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, நேற்று(நவம்பர் 30) காலை நடைபயிற்சி சென்ற போது, மயங்கி விழுந்து இறந்தது.
இதையடுத்து, பக்தர்கள் வெள்ளத்தில் லட்சுமி உடல் ஊர்வலமாக எடுத்து செல்லபட்டு, வனத்துறை தலைமை அலுவலகம் பின்புறம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சராசரியாக 80 ஆண்டுகள் வரை யானைகள் வாழும்பட்சத்தில், 32 வயதான யானை லட்சுமி உயிரிழந்தது புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
யானை இறந்தது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் குழு, யானை லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்தது.
யானை லட்சுமி உடலுக்கு ஒன்றரை மணி நேரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதயம், ஈரல், நுரையீரல், தும்பிக்கை பகுதியில் இருந்து சென்னை குழுவினர் மாதிரி எடுத்து சென்று உள்ளனர்.
மாதிரிகளை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த பிறகே இறப்பிற்கான முழு விபரம் தெரியவரும்.

பிரேத பரிசோதனையின்போது லட்சுமியின் தந்தத்தை அறுத்து எடுத்து புதுச்சேரி வனத்துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.
சில ஆய்வுகளுக்கு பிறகு லட்சுமியின் தந்தம், கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.
பொதுவாக பெண் யானைகளுக்கு தந்தம் இருப்பது வெளியே தெரியாது. ஆனால் லட்சுமி யானைக்கு, ஆண் யானை போன்று தந்தம் வளர்ந்து இருந்தது சிறப்பான ஒன்று.
ஆசிய இந்திய யானைகளில் தந்தம் ஆண் யானைகளுக்கு மட்டுமே உண்டு. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் என இரண்டு யானைகளுக்கும் தந்தம் உண்டு.
யானை லட்சுமிக்கு தந்தம் இருந்தது சிறப்பிலும் சிறப்பு. ஆயிரத்தில் ஒரு யானைக்குதான் இது போன்று வளரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலை.ரா