இயேசு கனவில் வந்து சிவக்குமார் சுவாமியை உடைக்க சொன்னதாக, பெங்களூருவில் கைதான நபர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் லிங்காயத் மக்களின் மானசீக குருவாக சிவக்குமார் சுவாமி பார்க்கப்படுகிறார். பெங்களூருவில் சித்தகங்கா மடத்தில் சிவக்குமார் சுவாமி சிலை உள்ளது. கடந்த நவம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் இந்த சிலையை ஒருவர் சேதப்படுத்தினார்.
போலீசார் விசாரணை நடத்தி ஸ்ரீகிருஷ்ணா என்ற ஆந்திராவை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். 37 வயதான இவர், டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். போலீசார், அவரிடத்தில் விசாரணை நடத்திய போது, இயேசு கனவில் வந்து தன்னிடத்தில் சிலையை சேதப்படுத்த சொன்னதாக கூறியுள்ளார். இந்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, போலீசாரால் கைதான ஸ்ரீகிருஷ்ணா, மனநிலையை பரிசோதித்து பார்க்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆர்ச் பிஷப் பீட்டர் மச்சாடோ கூறுகையில், ‘கைதானவரின் இந்த வாக்குமூலம் அடிப்படையற்றது , கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களால் பொதுமக்களை தூண்டிவிட வேண்டாம். அமைதி மற்றும் மதச்சார்பற்ற கருத்துக்களை அடையாளமாக கொண்ட சிவகுமார் சுவாமி ஜி போன்ற ஆன்மீகவாதியை அவமரியாதை செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது‘ என்று தெரிவித்துள்ளார்.
கன்னட மக்கள் சிவக்குமார் சுவாமியை ‘நடக்கும் கடவுள்‘ என்று அழைப்பார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு தனது 111வது வயதில் அவர் காலமானார். கல்வி மற்றும் சமுதாயத்துக்கு சிவக்குமார் சுவாமி செய்த நல்ல காரியங்கள் அளப்பரியவை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வானிலை மையம் எச்சரிக்கை!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம்!