கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மலைப்பாம்பைப் பிடிக்கச் சென்றவர் பாம்பு இறுக்கியதில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே பன்னிஅள்ளி கிராமத்தில் சின்னசாமி என்பவருக்குச் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்திற்குள் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்தது.
பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த சின்னசாமி, பாம்பைப் பிடிப்பதற்காக பனக்குட்லு கிராமத்தைச் சேர்ந்த நட்ராஜ் என்பவரை அழைத்தார். நட்ராஜ் பாம்பைப் பிடிப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக மலைப்பாம்பு நட்ராஜின் கால் மற்றும் உடலில் முழுவதுமாக சுற்றிக்கொண்டது. பாம்பின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக நட்ராஜ் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார்.
அப்போது அருகிலிருந்த 30 அடி ஆழமுள்ள கிணற்றில் பாம்புடன் சேர்ந்து தவறி விழுந்தார். அத்துடன் பாம்பு உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு இறுக்கியதால் நட்ராஜால் நீச்சல் அடித்து கிணற்றுக்கு மேலே வர இயலாமல் போனது.
மேலும், நீரில் மூழ்கிய நட்ராஜ் கிணற்றுக்குள் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
மலைப்பாம்பு இன்னும் பிடிபடாமல் கிணற்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது.
நட்ராஜின் உடலை கிராம மக்கள் கிணற்றிலிருந்து கயிறுக் கட்டி தூக்கினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
பரமக்குடியில் ரயில் மேல் ஏறிய இளைஞர்: மின்சாரம் பாய்ந்ததால் விபரீதம்!