சென்னையில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி 3 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை சுங்கச்சாவடியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சென்ற காரை நிறுத்தி நேற்று(அக்டோபர் 21) போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான 48 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராயப்பா ராஜூ அந்தோணி என்பது தெரிய வந்தது. அவரை சென்னை அயப்பாக்கத்தில் இருக்கக்கூடிய போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

ராயப்பாவுக்கு போதைப் பொருள் கிடைத்தது எப்படி, விமானநிலைய அதிகாரிகள் யாருக்காவது இதில் தொடர்பு இருக்கிறதா, வெளி மாநிலத்தில் இருந்து போதைப் பொருள் வாங்கப்பட்டதா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, ராயப்பா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ராயப்பா திடீரென்று 3 ஆவது மாடியில் இருந்து குதித்தார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து திருமுல்லைவாயில் காவல்துறையினரும், தடயவியல் நிபுணர்களும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அம்பத்தூர் குற்றவியல் நீதிபதி விசாரணை நடத்த உள்ளார் என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
கலை.ரா
9 மணி நேர அறுவைச்சிகிச்சை: சாக்ஸோபோன் வாசித்த நோயாளி!
மீரா மிதுனை காணவில்லை: தாய் பரபரப்பு புகார்!