கிருஷ்ணகிரி அருகே வனத்துறையினர் விரட்டியபோது, தாழ்வாக சென்ற மின்சார கம்பியில் உரசி ஆண் யானை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள யானை கூட்டத்தின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் அருகே கூட்டம் கூட்டமாகவும், தனியாகவும் யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.
இதையடுத்து யானைகளின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலத்தோட்னப்பள்ளி கிராமத்தில் மூன்று யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அதிகாலை முதல் யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மூன்று யானைகளும் விரட்டப்பட்ட போது, அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வழியாக யானைகள் வனப்பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளன. அப்போது எதிர்பாராத விதமாக தாழ்வாக சென்ற மின் கம்பியில் ஆண் யானை ஒன்று உரசி, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
மற்ற இரு யானைகளும் காட்டு பகுதிக்குள் சென்று மறைந்தன. இதையடுத்து உயிரிழந்த யானையின் உடலை சோதனை செய்த வனத்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையினரின் அலட்சியம் காரணமாகவே இது யானை உயிரிழந்திருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த வன உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பாகற்காய்- வேர்க்கடலைக் குழம்பு!
டிடிஎஃப் வாசனுக்கு வாகனத்துல கண்டம்: அப்டேட் குமாரு
அதிமுக அணையப்போகிற விளக்கு: அண்ணாமலை காட்டம்!
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் டும் டும் டும்… இன்விடேஷன் ரெடி!