உணவகங்களில் மட்டுமே ருசி பார்த்த சிறப்பு உணவுகளான ஹனி கார்லிக் சிக்கன், தவா ஃபிஷ் ஃப்ரை, மொஹல்மட்டன்கிரேவி, ஷாஹி முட்டை கறி, கிரிஸ்பி இறால் வறுவல் போன்றவற்றுடன் இந்த மலாய் டங்ரி கபாப்பும் குறிப்பிடத்தக்கது.
இந்த மலாய் டங்ரி கபாப்பை வீட்டிலேயே செய்து, இன்றைய சுதந்திர நாளைச் சிறப்பாகக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
சிக்கன் லெக்பீஸ் – 4
துணியில் வடிகட்டிய தயிர் (Hung curd) – 100 கிராம்
ஃப்ரெஷ் க்ரீம் – 5 டேபிள்ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை – ஒன்று
வெண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
சிக்கன் லெக் பீஸில் கத்தியால் கீறல் போடவும். அத்துடன் எலுமிச்சைச்சாறு, உப்பு இரண்டையும் சேர்த்துப் புரட்டி 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் வடிகட்டிய தயிர், ஃப்ரெஷ் க்ரீம், கார்ன்ஃப்ளார், வெள்ளை மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதில் சிக்கன் லெக்பீஸை 30 நிமிடங்கள் மறுபடியும் ஊறவைக்கவும்.
இந்தக் கலவையை ஃப்ரிட்ஜில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வைக்கவும். பின்பு அரை மணி நேரம் வெளியில் வைக்கவும். இதை ஒரு அவனில் (oven) 15 நிமிடங்கள் 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்.
`அவன்’ இல்லாதவர்கள் காஸ் அடுப்பின் மீது ஒரு தவாவை வைத்து சிறிதளவு வெண்ணெயைத் தடவி இந்த சிக்கனை ஐந்து நிமிடங்கள் மூடி போட்டு வேகவிட்டு, பின்னர் பத்து நிமிடங்கள் என இரண்டு புறமும் நன்கு தவாவின் மேல் வேகவிடவும்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு வயர் ரேக்கின் (புல்கா செய்யும் ஸ்டீல் வயர் கம்பி தவா) மீது வைத்து ஐந்து நிமிடங்கள் இருபுறமும் தீயின் மேல் காட்டவும். இது ஒரு தந்தூரி பர்னிங் தன்மையைக் கொடுக்கும்.
இதன் மேல் வெண்ணெயைத் தடவவும். இதைப் புதினாச் சட்னி, தயிர்ப் பச்சடியுடன் பரிமாறவும்.
எடையைக் குறைக்க உதவுமா பிளாக் காபி?
கிச்சன் கீர்த்தனா : கிரிஸ்பி ஹனி சிக்கன்!