பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றியது குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை இன்று (செப்டம்பர் 12) தலைமை செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
சைதாப்பேட்டை, அசோக் நகர் அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி சர்ச்சையில் சிக்கி, பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளியில் மகாவிஷ்ணு சொற்பொழிவு நடத்த அனுமதி அளித்தது யார்? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார் என்று கூறியிருந்தார்.
அதன்படி பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சென்னை அசோக் நகர் பள்ளியில் 3 முறை விசாரணை செய்தார். அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்களிடம் நிகழ்ச்சி தொடர்பாக விசாரித்தார்.
மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுத்தது யார், பள்ளி மேலாண்மை குழு சம்பந்தப்பட்டுள்ளதா, முறையாக அனுமதி பெறப்பட்டதா, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா, அவருக்கு பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, தலைமை செயலாளர் முருகானந்தத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த தமிழரசி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மதுமதியிடம் அன்று நடந்தது குறித்து விளக்கமளித்துள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன.
பள்ளிக் கல்வித் துறை விசாரணை ஒருபக்கம் நடைபெற, மறுபக்கம் காவல்துறையினர் மகாவிஷ்ணுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்திற்கு அவரை இன்று அழைத்து வந்த போலீசார், அங்குவைத்து விசாரணை நடத்தினர். அங்கு விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் அவரை சென்னை அழைத்து வந்துகொண்டிருக்கின்றனர் காவல்துறையினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பரம்பொருளைத் தவிர வேறு சில பொருள்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: கூட்டணிப் பிரச்சினை… கோவாவில் இருந்த வேலு அவசரமாய் போன் போட்ட திருமா