அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றி, ஆசிரியர் சங்கரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில், கடந்த 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை வந்த மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்தனர். 14 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து நேற்று (செப்டம்பர் 10) மின்னம்பலத்தில் ‘மகாவிஷ்ணுவை போலீஸ் கஸ்டடியில் எடுக்க நீதிமன்றத்தில் மனு!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (செப்டம்பர் 11) நடைபெற்றது. அப்போது, புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மகாவிஷ்ணுவை அழைத்து வந்து போலீசார் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி சுப்பிரமணியம் முன் நடைபெற்ற விசாரணையின் போது, தனது ஜாமீன் மனுவை மகாவிஷ்ணு வாபஸ் பெற்றார். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அதனால் தான் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவை திரும்பப் பெறுவதாகவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி சுப்பிரமணியம், மகா விஷ்ணுவிடம் விமான நிலையத்தில் வைத்தே அன்று மாலை வரை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், எதற்காக 7 நாட்கள் கஸ்டடி கேட்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு போலீஸ் தரப்பில், யார் அழைப்பின் பேரில் அவர் அரசு பள்ளிக்கு வந்தார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி, 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
உரங்கள் விற்பனை: கட்டாயப்படுத்தப்படும் விவசாயிகள்… எம்ஆர்கே வார்னிங்!
6 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த தந்தை… அதிர்ச்சியில் உறைந்த மலைகா!