“அமைச்சர் அன்பில் மகேஷ் நல்ல மனிதர்” – மகாவிஷ்ணு வாக்குமூலம்!

Published On:

| By Selvam

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு, போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்களை சொல்லியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய போது, மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை இழிவுபடுத்திய வழக்கில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி மகாவிஷ்ணுவை போலீசார் கஸ்டடியில் எடுத்தனர். இந்த மூன்று நாள் விசாரணையில் மகாவிஷ்ணு என்ன சொன்னார்? கஸ்டடியில் என்ன நடந்தது? என்று போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மகாவிஷ்ணு சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது போலீசார் அவரிடம் சாப்பிட என்ன வேண்டும்? என்று கேட்டனர்.

இதற்கு மகாவிஷ்ணு, ஐஸ் இல்லாமல் ஃபிரஸ் ஜூஸ், ஒரு வாட்டர் பாட்டில் வேண்டும் என்று கேட்க, இரண்டையும் டியூட்டியில் இருந்த போலீசார் உடனே வாங்கி கொடுத்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் மகாவிஷ்ணு டீ கேட்டார். அதையும் போலீசார் வாங்கி கொடுத்தனர்.

இரவு சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு ஓய்வெடுங்கள், காலையில் பார்ப்போம் என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டர் சேட்டு வெளியில் கிளம்பி விட்டார்.

இந்நிலையில், மகாவிஷ்ணு தூங்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் இரவு 11.30 மணி அளவில், இன்ஸ்பெக்டர் சேட்டு மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்தார்.

அந்த சமயத்தில் சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு வெளியே போலீஸ் வேன் ஒன்று தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தூக்கத்தில் இருந்த மகாவிஷ்ணுவை எழுப்பி, இரவே திருப்பூர் போகணும் போகலாமா? என்று இன்ஸ்பெக்டர் கேட்க, போகலாம் சார் என்று அவரும் கூறினார்.

எந்த வண்டியில் சார் போகிறோம் என்று மகாவிஷ்ணு கேட்க, இதோ இந்த வண்டியில் தான் என்று போலீஸ் வேனை காட்டினர்.

அந்த வேனில் இரவே, போலீசார் மகாவிஷ்ணுவை அழைத்துக் கொண்டு திருப்பூர் புறப்பட்டனர். செல்லும் வழியில் இடை இடையே மகாவிஷ்ணு தூங்கி எழுந்தார். மறுநாள் காலை சுமார் 9 மணிக்கு போலீசார் திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளைக்கு சென்றடைந்தனர்.

அங்கு போலீசார் சோதனை இட்டதில், முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், ஹார்டு டிஸ்க், சிசிடிவி கேமரா, சிசிடிவியில் பதிவான ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே மகாவிஷ்ணுவிடம் அவ்வப்போது விசாரணையும் செய்தார் இன்ஸ்பெக்டர் சேட்டு.

என்ன படிச்சிருக்கீங்க?

10 வது படிச்சிருக்கேன் சார்.

ஏன் படிப்பை பாதியிலேயே நிறுத்துனீங்க? டிகிரி படிச்சிருக்கலாமே?

பணம் பார்த்துட்டேன் சார். அதான் படிப்பை விட்டுட்டேன்.

சினிமா ஆர்வம் எப்படி வந்துச்சு?

எனக்கு 14 வயசு இருக்கும்போது லியோனி பட்டிமன்றம் பார்த்தேன். அப்போதிலிருந்து சினிமா மேல ஆர்வம் சார்.

சரி… உங்களோட முதல் பட்டிமன்றம் தலைப்பு என்னனு சொல்லுங்க பார்ப்போம்?

ஞாபகம் இல்லை சார்.

படிக்குற காலத்துல சரஸ்வதி போன்ற தெய்வங்களை நீங்கள் கிண்டல் பண்ணதா உங்களோட வகுப்பு நண்பர்கள் சொல்றாங்களே? அப்படி இருந்த நீங்க… எப்படி ஆன்மீகத்துக்கு வந்தீங்க?

இதுவரை 54 ஜீவசமாதிகளுக்கு போயிருக்கேன். அதுதான் ஆன்மீகத்தை நோக்கி என்னை இழுத்துச்சு சார்.

இந்த மாதிரியான மோட்டிவேஷன் ஸ்பீச் மேல எப்படி ஆர்வம் வந்துச்சு?

ஸ்கூல் படிக்கும்போது செந்தாமரைனு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க அடிக்கடி மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுத்து Five Star சாக்லேட் கொடுப்பாங்க. அதுல இருந்துதான் மோட்டிவேஷன் ஸ்பீச் மேல ஆர்வம் வந்துச்சு.

இந்த இரண்டு ஸ்கூல்லயும் உங்கள பேசச் சொன்னது யார்? நிகழ்ச்சிக்கு அழைத்தது யார்?

எல்லாமே சி.இ.ஒ தான் சார்.

அரசியல் கட்சியில உங்களுக்கு யாரோடெல்லாம் தொடர்பு இருக்கு?

(ஸ்மைல் செய்தபடி) பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்திச்சிருக்கேன். போட்டோ எடுத்திருக்கிறேன். அவர் நல்ல மனிதர்.

அதிமுக பாஜக போன்ற வேற ஏதாவது கட்சியை சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருக்குதா?

யாருடனும் எனக்கு தொடர்பும் இல்லை, பழக்கமும் இல்லை சார் .

வருமானம் எப்படி வருது?

ஒன் டூ ஒன் ஆன்லைன் கட்டணம் ஐந்து ஆயிரம் ரூபாய் வாங்குவேன். பலர் என்னிடம் பேச அப்பாயிண்ட்மெண்ட் கேட்பாங்க.

வேறு எந்த வழியில வருமானம் வருது?

மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுக்க போனா விருப்பப்பட்ட தொகையை கொடுப்பாங்க. என்னோட அறக்கட்டளை பத்தி தெரிஞ்சவங்க நன்கொடை கொடுப்பாங்க சார்.

ஒவ்வொரு வருஷமும் கோடிக்கணக்குல பணம் வந்துருக்கே?

யார் யார் கொடுத்தாங்கன்னு எல்லா கணக்கும் இருக்கு சார். பேங்க் மூலமாதான் டிரான்ஸக்‌ஷனும் நடந்துருக்கு.

இனி வெளியில போன பிறகும் ஆன்மீக பாதையில தான் பயணிப்பீங்களா?

ஆன்மீகத்தை விடமாட்டேன் சார். நித்யானந்தவ விரட்டினாங்க. நாடு கடந்தும் நல்லா இருக்கார். என்னையும் விரட்ட நினைக்கிறாங்க. இதுக்கு பின்னால சில சாமிகள் தான் இருக்காங்க.

இவ்வாறு போலீசார் விசாரணைக்கு பதில் அளித்து இருக்கிறார் மகாவிஷ்ணு.

கடந்த 13ஆம் தேதி காலை 5:30 மணிக்கு திருப்பூரில் இருந்து மீண்டும் சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட பின் நான்கு மணி நேரம் மகாவிஷ்ணு தூங்கி இருக்கிறார். அதன் பிறகு டீ சாப்பாடு வாங்கிக் கொடுத்த போலீசார், காவல் நிலைய நடைமுறையை எல்லாம் முடித்துவிட்டு சிறிது நேரம் விசாரணைக்கு பின் மீண்டும் மகாவிஷ்ணுவை சிறைக்கு அனுப்பினர்.

அப்போது போலீசாருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்ட மகாவிஷ்ணு, சிறையில் இருந்து வந்த பிறகு உங்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

நேற்றுடன் மகாவிஷ்ணுவுக்கு போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை: வானிலை மையம் அப்டேட்!

“தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சே கிடையாது” : செல்லூர் ராஜூ

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel