இன்று (செப்டம்பர் 26) மகாளய அமாவாசையை முன்னிட்டு குமரி, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று கடைப் பிடிக்கப்படுகிறது. இந்நாளில் மக்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து நீர்நிலைகளில் வழிபடுவது வழக்கம்.
பலிகர்ம பூஜை பொருட்களான பொங்கல், பச்சரிசி, அருகம்புல், பூ, தர்ப்பை புல், எள்ளு போன்ற பொருட்களை வாழை இலையில் வைத்து புரோகிதர்கள் கொடுப்பார்கள்,
அதனைத் தலையில் வைத்துச் சுமந்தவாறு சென்று நீர் நிலைகளில் விடுவர்.
முன்னோர்களை வழிபட்டு செய்யும் இந்த பூஜைக்காக ஏராளமான மக்கள் இன்று காலை முதலே குமரி மாவட்டத்தில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் குவிந்தனர்.
அதிகாலை 2 மணி முதலே இங்கு வரத் தொடங்கிய மக்கள், புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.
இதைத்தொடர்ந்து, கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டனர்.
அமாவாசையை முன்னிட்டு குமரியில் வெளிமாநிலங்களிலிருந்து மக்கள் சென்றுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதுபோன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் பகுதியிலும் ஏராளமான மக்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனால் ராமேஸ்வரம் கடல் பகுதி மக்கள் கடலாய் காட்சி அளித்தது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடி வழிபாடு செய்தனர்.
கார், வேன், பேருந்து என ராமேஸ்வரத்துக்கு வாகனங்கள் அணி வகுப்பதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் சேலம், கரூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வந்தும் மக்கள் தர்ப்பணம் செய்து செல்கின்றனர்.
அதிகாலை முதல், புனித நீராடி முன்னோர்களுக்குத் திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
ஏராளமான மக்கள் பவானியில் குவிந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதோடு காவிரியில் அதிகளவிலான நீர் செல்வதால் உள்ளூர் மீனவர்களும், தீயணைப்புத் துறையினரும் படகு மூலம் ஆற்றுக்குள் சென்று ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.
இதுபோன்று நீர்நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே, முன்னோர்களுக்கு பிடித்த உணவை செய்து வைத்து விரதம் இருந்து வழிபடுகின்றனர்.
பிரியா
ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார்?
‘பகாசூரன்’ : பக்திப் படமா? அரசியல் படமா?