சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் இன்று (மே 22) நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி கங்காபூர்வாலா
1985 ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கிய சஞ்சய் வி.கங்காபூர்வாலா, கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக சஞ்சய் வி.கங்காபூர்வாலா இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவரை தொடர்ந்து, மூத்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா அகியோர் பொறுப்பு தலைமை நீதிபதிகளாக இருந்து பணி ஓய்வு பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து, 2023 ஏப்ரல் மாதத்தில் மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் வி.கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, 2023 மே 28ஆம் தேதி தலைமை நீதிபதியாக சஞ்சய் வி.கங்காபூர்வாலா பதவியேற்றார். இவர் நாளையுடன் ஓய்வு பெறுகிறார்.
இதன்காரணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி ஆர்.மகாதேவன்
ஆர்.மகாதேவன் வழக்கறிஞராக 1986ஆம் ஆண்டு சட்ட பணியை தொடங்கினார். சிவில், கிரிமினல் வழக்குகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் ஆர்.மகாதேவன். மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் வி.கங்காபூர்வாலா நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், மூத்த நீதிபதி ஆர்.மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மே 24ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் பணியாற்றுவார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…