திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்!

தமிழகம்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27 ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருக்கார்த்திகை தீபவிழாவின் 10 ஆம் நாளான இன்று(டிசம்பர் 6) காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக  கோயிலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு  சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலய கொடிமரத்தின் முன்பே தீப தரிசன மண்டபத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்து தீப மண்டபத்தில் எழுந்தருளினர். 

பின்னர் சரியாக மாலை 5.55 மணியளவில்  ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் சிவனின் பாதி சக்தி என்பதை உணர்த்தும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் தாண்டவம் ஆடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

அப்போது கோயிலின்  கொடி மரத்தின் அருகில் உள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சரியாக மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது அனேகன் ஏகனாக ஜோதி வடிவமாக மாறும் தத்துவத்தை விளக்கும்  விதமாக மகா  தீபம் ஏற்றப்பட்டது.

 

மலையின் மீது   5 3/4 அடி உயரமும், 300 கிலோ எடை கொண்ட கொப்பறையில் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கப்பட்ட 4500 கிலோ நெய் நிரப்பப்பட்டு 1100 மீட்டர் காடா துணியை  திரியாக அமைத்து பர்வதராஜ குலத்தினர் சார்பில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த மகா தீப தரிசனத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர். இன்று ஏற்றப்பட்ட மகா தீபம் மூலம் தொடர்ந்து 11 நாட்கள்  அண்ணாமலையார் ஜோதி சுடராய் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

கலை.ரா

இதெல்லாம் சரியல்ல: தமிழிசை சவுந்தரராஜன்

குளிர்கால கூட்டத்தொடர்: திமுகவின் கோரிக்கைகள் என்னென்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *