மாற்றுத்திறனாளி ஆசிரியரை இழிவுபடுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகா விஷ்ணு இன்று (அக்டோபர் 5) புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் தன்னம்பிக்கை வகுப்பு எடுத்தபோது அங்கு பணியாற்றிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கரை இழிவுபடுத்தும் வகையில் மகா விஷ்ணு பேசியது பெரும் சர்ச்சையானது.
இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் அவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டை காவல்துறையினர் மகா விஷ்ணு மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து மகா விஷ்ணுவை மூன்று நாட்கள் கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில், “மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய பேச்சை இணையத்தில் சிலர் எடிட் செய்து வெளியிட்டதால் தான் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஒருவேளை என்னுடைய பேச்சு மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், மகா விஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி உத்தரவிட்டார்.
நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து மகா விஷ்ணு இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரது ஆதரவாளர்கள் புழல் சிறைக்கு வெளியே குவிந்திருந்தனர். மகா விஷ்ணு வெளியே வந்ததும் அவருக்கு மாலை அணிவித்து ஆரவாரம் செய்தனர்.
ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மகா விஷ்ணு, “அன்பு ஒன்று தான் அகிலமானது. அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். தடைகளை கடந்து இறைவனை நேசிப்போம், மக்களை நேசிப்போம், அனைத்து உயிர்களையும் மதிப்போம். இறைவன் எதை செய்தாலும், அதை ஒரு காரணத்தோடு தான் செய்வார். அதனை முழு மனதோடு ஏற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – வானிலை மையம் அப்டேட்!
ஜெயம் ரவியின் அடுத்தப் படம்… இயக்குனர் இவர் தான்!