எனக்கு இட்ட கட்டளை… பள்ளியில் பேச அழைத்தவர்… மகா விஷ்ணு தந்த வாக்குமூலம்!

தமிழகம்

சென்னையில் இரு அரசுப் பள்ளிகளில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கை உரையாற்றிய மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகளை புண்படுத்திய குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டு, அன்று மாலை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதில் இருந்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தும் முன்பு வரை போலீஸார் சுமார் இரண்டு மணி நேரம், ஓடும் வாகனத்திலேயே மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணை பற்றிய விவரங்களை போலீஸ் வட்டாரத்தில் துருவினோம்.

இதோ அந்த விசாரணை…

 

உங்களுக்கு என்ன பின்புலம்… அரசியல் பின்புலம் இருக்கா… ஆன்மீக பின்புலம் இருக்கா?

சார் நீங்க சொன்ன ரெண்டு பின்புலமும் எனக்கு கிடையாது. எனக்கு சினிமா பின்புலம்தான் இருக்கு. நான் சின்ன வயசுலயே மதுரை மஹானு சன் டிவியில அசத்தப்போவது யாருனு காமெடி நிகழ்ச்சி பண்ணினேன். அதுக்குப் பிறகு சினிமாவுல ஆர்வமாகி சென்னைக்கு வந்தேன். சினிமாவுல டிஸ்டிரிபியூஷன், புரொடக்‌ஷன் பண்ணேன். அப்படிப் பாத்தா எனக்கு சினிமா பின்புலம்தான் இருக்கு…

அப்படின்னா உங்களுக்கு ஆன்மீகத்தில எப்படி ஈடுபாடு எப்ப உருவாச்சு?

நான் அஞ்சு வருசத்துக்கு முன்னாடி பீகார் போனேன். அங்க பாட்னா பக்கத்துல ஒரு ஃபால்ஸ்ல குளிச்சிக்கிட்டிருந்தப்ப, திடீர்னு என் காதுக்குள்ள, ‘மேல வா’னு தமிழ்ல ஒரு குரல் கேட்டுச்சு. எனக்கு ஒண்ணுமே புரியலை… மறுபடியும் ஒரு அசரீரி போல எனக்கு அந்த குரல் கேட்டுச்சு. நான் அண்ணாந்து பாத்துக்கிட்டே நிக்கிறேன்… தண்ணி விழுற சத்தமெல்லாம் எனக்கு கேக்கலை… ‘மேல வா…’ன்ற குரல் மறுபடியும் கேட்டுச்சு.

மேலே எப்படி போறதுனு தெரியாம நான் அப்படியே நின்னேன்… அப்பதான், ‘உனக்குனு ஒரு திறமை ஒருக்கு. உனக்குனு ஒரு சக்தி இருக்கு அதை பயன்படுத்து…சித்தர்களை தேடி போ’னு அந்த குரல் எனக்கு கட்டளையிட்டுச்சு. அதுக்குப் பிறகுதான் அது காசி விஸ்வநாதர் கட்டளைனு நான் உணர்ந்தேன்.

அதை உணர்ந்ததும் அங்க இருந்த வேலையெல்லாம் விட்டுட்டு உடனே நம்மூருக்கு வந்துட்டேன். இங்க வந்து திருவான்மியூர், எக்மோர், விருகம்பாக்கம், திருவண்ணாமலை, பழனி, திருநெல்வேலினு சித்தர்கள் இருந்த இடத்துகெல்லாம் சுத்தி திரிஞ்சேன். ஒவ்வொரு சித்தர் வாழ்ந்த இடமா போனேன்… தியானம் பண்ணேன்… இப்படித்தான் நான் ஞானம் அடைஞ்சேன்…

நித்யானந்தா மாதிரியே பேசுறிங்களே… அவரைப் போல ஆகணும்குறதுதான் உங்க ஆசையா?

நித்யானந்தர் யாரையும் கட்டாயப்படுத்தி வாங்க வாங்கனு கூப்பிடலை. மக்கள்தான் அவரை ஏத்துக்கிட்டு போனாங்க. மக்கள்தான் அவரைத் தேடிப் போனாங்க.

நானும் என்னைத் தேடி வாங்கனு யாரையும் போய் கூப்பிடலை. இன்னிக்கு என்னைத் தேடி பல பேர் வர்றாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பிரச்சினையோட வர்றாங்க, கவலையோட வர்றாங்க… நான் அவங்க மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சு அவங்கக்கிட்ட பேசுறேன்.

நான் பேசுறதுலயே அவங்க கஷ்டம் குறையுறதா சொல்றாங்க. அதுக்குப் பிறகு அவங்க பிரச்சினைக்கு நான் தீர்வு சொல்றேன். வேற எங்கயும் கிடைக்காத தீர்வு அவங்களுக்கு என்கிட்ட கிடைச்சதால மறுபடியும் என்னைத் தேடி வர்றாங்க. நானா எதையும் பேசலை… காசிவிஸ்வநாதர் சொல்றதைத்தான் நான் செய்யுறேன். அதை ஏத்துக்கிட்டு மக்கள் என் பின்னாடி வர்றாங்க.

உங்களுக்கு என்ன வருமானம்?

கடந்த ஆண்டு மட்டும் எங்களுடைய பரம்பொருள் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்ல இரண்டரை கோடி ரூபாய் வந்திருக்கு. ஞானத்தைத் தேடுறவங்க கொடுக்குற டொனேஷன் மற்றும் நான் என்னோட வகுப்புகளுக்கு வாங்கும் கட்டணம்தான் வருமானம்.

இந்த ஃபவுண்டேஷன்ல உங்க உறவினர், குடும்பத்தினர், நெருக்கமான நண்பர்கள் மட்டும்தானே நிர்வாகத்துல இருக்காங்க..?

டிரஸ்டில் யார் யார் இருக்கணும்னு காசி விஸ்வநாதர் சொல்லுவாரு. அவர் சொல்றதைத்தான் செய்வேன்.

ஆஸ்திரேலியாவில் இருந்த நீங்க உங்க நிகழ்ச்சிகளை எல்லாம் முடிச்சுட்டு வந்திருக்கலாமே… ஏன் உடனே வந்தீங்க?

சிங்கப்பூர் நிகழ்ச்சியெல்லாம் ரத்து பண்ணிட்டுதான் வந்தேன். என் மேல் வழக்கு போட்டிருக்காங்க, என்னைப் பத்தி தவறான செய்திகள் மேலும் பரப்பக் கூடாதுனுதான் காசி விஸ்வநாதர் என்னை உடனே வரச் சொன்னார். அதன்படியே வந்தேன்.

கான்ட்ரவர்சியான இந்த ஸ்கூல் நிகழ்ச்சிக்கு உங்களை கூப்பிட்டது யாரு? நீங்களே கேட்டு வந்தீங்களா… இல்லை வேற யாராவது ஏற்பாடு பண்ணாங்களா?

காசி விஸ்வநாதர் சொல்லாமல் எங்கயும் நானா போகமாட்டேன். அந்த ஸ்கூலுக்கு நானா போகலை. சி.இ.ஓ.ஆபீஸ்லேர்ந்து எனக்கு போன் போட்டு, அந்த நிகழ்ச்சிக்கு வரமுடியுமானு கேட்டாங்க. மாணவர்கள் மத்தியில உரையாடுவது நல்ல விஷயம்னு ஏத்துக்கிட்டேன்.

ஒரு ஸ்கூல்ல போய் அப்படி பேசலாமா? போன ஜென்மம், அடுத்த ஜென்மம்னு பேசினா பசங்க பயப்பட மாட்டாங்களா? ஒரு வேளை அடுத்த ஜென்மத்துல நாம குறைபாடா பிறப்போமானு பசங்க பயத்துல ஏதாவது செஞ்சுக்கிட்டா அதுக்கு நீங்கதான பொறுப்பு?

சார்… என்னை அங்க முழுமையா பேசவே விடலை. நான் பேச்சை ஆரம்பிச்சு போய்க்கிட்டிருக்கும்போதே அந்த சார் குறுக்கிட்டு கேள்வி கேட்டாரு. ஊனம் என்பதெல்லாம் ஒரு குறைபாடே கெடையாது என்பதை சொல்லத்தான் நான் அந்த டாப்பிக்கையே ஆரம்பிச்சேன். ஆனா என்னை பேசவே விடாமல் செய்துவிட்டார்கள்.

அந்த ஆசிரியர் கேட்டது சரிதானே… அவர் மனசு புண்பட்டுள்ளதே…

என் ஞானத்துக்கு எட்டியபடி அந்த ஆசிரியர் நல்ல எண்ணத்தோடு என்னிடம் கேள்வி கேட்கலை. அதனாலதான் நான் அவரோட ஆர்க்யூமெண்ட் செய்தேன். இல்லையென்றால் நான் அவரிடம் வாதம் பண்ணியிருக்கவே மாட்டேன். என்னை முழுதாக பேச விட்டிருந்தா… அந்த ஆசிரியர்கிட்ட நான் மன்னிப்பு கூட கேட்டிருப்பேன். அவரோட தொனி வேற மாதிரி இருந்ததாலதான் நான் அப்படி பதில் சொன்னேன். என்று போலீஸ் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியிருக்கிறார் மகாவிஷ்ணு.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுக கூட்டணியில் பிளவா? – அமைச்சர்கள் பதில்… திருமா விளக்கம்!

மதுரை: ஆக்‌ஷனில் இறங்கிய உதயநிதி… நான்கு அதிகாரிகள் டிரான்ஸ்பர்!

+1
0
+1
4
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *