அரசு பள்ளியில் பரம்பொருள் மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக விளக்கமளிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து நாளை (செப்டம்பர் 7) மதியம் 1.10 மணிக்கு சென்னை வருகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் மீது நிறைய தவறான கருத்துக்கள் ஊடகங்களில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. நான் எப்போதும் இந்தியாவில் வசிப்பதில்லை. இந்தியா உள்பட ஆறு நாடுகளில் எங்களுக்கு அலுவலகங்கள் உள்ளது. தொடர்சியான யோகா பயிற்சியை கொடுத்து வருகிறேன்.
அசோக் நகர் பள்ளியில் காலையிலும், சைதாப்பேட்டை பள்ளியில் மதியமும் ஆன்மீக சொற்பொழிவு கொடுத்துவிட்டு உடனடியாக அடுத்த நாளே ஆஸ்திரேலியா வந்துவிட்டேன். நான் ஓடி ஒளிய வேண்டிய அவசியமில்லை.
மாற்றுத்திறனாளிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், என் மீது சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது. பரம்பொருள் அலுவலகத்திலும், திருப்பூரில் உள்ள எனது வீட்டிலும் காவல்துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தியுள்ளார்கள். காவல்துறை அவர்கள் வேலையை சரியாக செய்கிறார்கள். அதில் எந்த தவறும் இல்லை.
தொடர்ந்து சிங்கப்பூர், துபாய், மொரிஷியஸ் நாடுகளில் எனக்கு வகுப்புகள் இருக்கிறது. இருப்பினும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நாளை மதியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைய இருக்கிறேன். காவல்துறைக்கு எந்தவிதமான கடினமும் இருக்கக்கூடாது.
இந்தியாவின் சட்டத்திட்டங்களை பெரிதும் மதிக்கக்கூடியவன், கட்டுப்படக்கூடியவன். அமைச்சர் அன்பில் மகேஷின் கோபத்தையும் சீற்றத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. சென்னை வந்தவுடன் அவரிடம் விளக்கம் கொடுக்க இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகா விஷ்ணுவுக்கு அனுமதி கொடுத்தது யார்? – பிரஸ்மீட்டில் சீறிய எடப்பாடி!