2 லட்சம் பேருக்கு பிரசாதம், ஹெலிகாப்டரில் பூ மழை: பழனி கும்பாபிஷேகம் கோலாகலம்!

தமிழகம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு திருப்புகழ், திருமுறைகள் ஒலிக்க, தமிழில் வேத மந்திரங்கள் முழங்க தங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 16 வருடங்களுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 25ஆம்தேதி நடந்தது. கடந்த 18ஆம்தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது.

மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான படிப்பாதை பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 4.30 மணிக்கு 8ம் கால வேள்வியுடன் தொடங்கி திருக்குட நன்னீராட்டுப்பெருவிழா, மங்கள இசை, முதல்நிலை வழிபாடு, ஐங்கரன் வழிபாடு, சந்திரன் வழிபாடு, நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பெருநிறை வேள்வி, நறும்புகை விளக்கு, படையல், திருஒளி வழிபாடு, வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், காவியம், கட்டியம், கந்தபுராணம், திருஒளி வழிபாடு, பன்னிரு திருமுறை விண்ணப்பம் நடைபெற்றது.

அதன் பின் காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் புறப்பாடாகி ராஜகோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

Maha Kumbabishekam in Palani after 16 years

சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், பரமாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

அப்போது கூடி இருந்த பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணைப் பிளந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் இருந்து ராஜகோபுரம் மீதும் பக்தர்கள் மீதும் மலர்கள் தூவப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கு புனித நீர் கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்த 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இது தவிர போலீசார், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மற்ற பக்தர்களுக்கு 16 இடங்களில் அகண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு சிரமம் இன்றி கும்பாபிஷேகத்தை நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கினர். அவர்கள் அடிவாரம், கிரிவல வீதி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த எல்.இ.டி. திரை முன்பு அமர்ந்து கும்பாபிஷேகத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர். பக்தர்கள் வசதிக்காக 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன.

அந்த பஸ்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பழனி கோவில் வரை இயக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கண்காணிக்க ஹெலிகேம் பறக்க விடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி நகரில் பிறநகர் பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை. முக்கிய இடங்களில் 300 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 7 கண்காணிப்பு மையங்கள் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், இணை ஆணையர் நடராஜன், நீதிபதிகள், அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. பழனி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன.

Maha Kumbabishekam in Palani after 16 years

விழா முடிந்த பின்னர் வழக்கம் போல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டதால் மலை வழிபாதையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் #PalaniMuruganTemple என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

சக்தி

சுவாமி சகஜாநந்தா: ஆரிய சூழ்ச்சியை அம்பலப்படுத்திய தலைவர்!

ஈரோடு கிழக்கு: ’தெலுங்கு’ வாக்காளர்களை குறி வைக்கும் ’விடுதலைக் களம்’ 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *