திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பதாக தகவல்கள் வந்துள்ளன.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி மகா தீபம் நடைபெற உள்ளது.
இந்த மகா தீப தரிசனத்தை காண தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து இந்த ஆண்டு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை வரும் பக்தர்கள் எந்த வித அசம்பாவிதமும் இன்றி சாமி தரிசனம் செய்து சொந்த ஊருக்கு செல்ல 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை நகர், அண்ணாமலையார் கோவில் மாடவீதி, புறவழிச் சாலை என திருவண்ணாமலையை சுற்றிலும் ஐந்து அடுக்கு போலீசார் இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள தங்கும் விடுதி, லாட்ஜ் உள்ளிட்ட இடங்களில் கியூ பிரான்ச் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரப் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளையும் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.
அறை எடுப்பவர்களின் ஆதார் எண்ணை லாட்ஜ் நிர்வாகம் பெறாமல் இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை நகர் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் 500 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, ட்ரோன்கள் பறக்கவிட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் டிசம்பர் 6,7, 8 ஆகிய தினங்களில் சென்னை மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மகா தீபத்தன்று மலை ஏறுவதற்கு 2500 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் டிசம்பர் 6ம் தேதி ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மகா தீப திருவிழாவில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்து மதக் கொள்கைகளை ஆழமாக கடைப்பிடிப்பவர் என்பதால் ஆளுநர் ரவி ஆன்மிக நிகழ்ச்சியான கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது இன்றுவரை ஆளுநர் வருகை உறுதியாகவில்லை என்கிறார்கள். ஆனால் உளவுத்துறை போலீஸார், ஆளுநர் வந்தாலும் வரலாம் என்று கிசுகிசுக்கிறார்கள்.
கலை.ரா