மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்காக இன்று (செப்டம்பர் 19) முதல் உதவி மையங்கள் செயல்பட உள்ளன.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று தொடங்கி வைக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரிமைத் தொகைக்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1 கோடியே 6 லட்சம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு செப்டம்பர் 18 (நேற்று) முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்பவர்கள் இந்த திட்டத்தில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக இன்று முதல் உதவி மையங்கள் செயல் பட உள்ளன.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் உதவி மையங்கள் செயல் பட உள்ளது. நிராகரிக்கப்பட்டதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் நிராகரிப்பு, விண்ணப்பம் ஏற்கப்பட்டும் ரூ. 1000 உதவித்தொகை கிடைக்காதவர்களும் இந்த உதவி மையத்தை நாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
மோனிஷா
பகடிவதையை (Ragging) வேர்விடச் செய்யாத மாணவர் பேரவை தேர்தல்கள்!
டிடிஎஃப் வாசன் லைசென்ஸ் ரத்து?