உயிர்களை பலி வாங்கும் மதுரவாயல் சாலை: அரசு கவனிக்குமா?

தமிழகம்

மதுரவாயல் அருகே சாலை விபத்தில் ஐ.டி பெண் ஊழியர் உயிர் இழப்பிற்கு சாலை குண்டும், குழியுமாக இருந்ததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போரூர் லட்சுமி நகர் விரிவு 1 ஆவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் ஷோபனா கூடுவாஞ்சேரி உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவரது தம்பி ஹரிஷ் 17 முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தனது தம்பியை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் எதிரே வந்த வேன், மோட்டார் சைக்கிள் கைப்பிடி மீது உரசியுள்ளது.

இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தபோது பின்னால் மணல் ஏற்றி வந்த லாரி ஏறி இறங்கியதில் ஷோபனா சம்பவ இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார்.

Maduravayal road taking lives

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய இரண்டு வாகன ஓட்டுநர்கள் மோகன், பார்த்திபன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இறந்து போன சோபனா குறித்து உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையைச் சேர்ந்த இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து வந்ததும் இவரது தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் வீட்டிற்கு தந்தையாக இருந்து அனைத்து பணிகளையும் சோபனா செய்து வந்துள்ளார்.

தினமும் தனது தம்பியை பள்ளியில் விட்டு விட்டு பைபாஸில் நேராக வேலைக்கு சென்று விடுவார். இந்த பகுதியின் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ஷோபனா பணியாற்றிய ZOHO நிறுவனத்தின் சி.இ.ஓ குண்டு குழியுமான சாலையே சோபனா உயிர் இழக்க காரணம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதே பகுதியில் தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாயும் மகளும் மோட்டார் சைக்கிள் இருந்து கால்வாயில் விழுந்து இறந்த போன சம்பவம் அரங்கேறியது.

உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு அவசரகதியில் சாலையை சீரமைக்கும் நெடுஞ்சாலை துறையினர் அதன்பிறகு அதனை கண்டு கொள்ளாமல் இருப்பதே இது போன்ற தொடர் உயிரிழப்புகளுக்கு காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தாம்பரம்-மதுரவாயல் சாலையை பொறுத்தவரை தாம்பரத்திலிருந்து புழல் வரை 32 கிலோ மீட்டர் கொண்டது. இதில் வானகரம்,கள்ளிக்குப்பம் ஆகிய இரண்டு பகுதிகளில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது.

2 சுங்கச்சாவடி செயல்பட்டும் சாலை பாரமரிப்பு செய்யப்படவில்லை. விபத்து ஏற்பட்டால் மின்விளக்கு, ஆம்புலன்ஸ் வசதிகூட இல்லை என்பது வாகன ஓட்டிகளின் புகார்.

இதுவரை 400க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் 32 கிலோ மீட்டர் சாலையில் 11 கிலோ மீட்டருக்கு மட்டுமே மழை நீர் வடிகால்வாய் உள்ளது.இந்த மழை நீர் வடிகால்வாய் திறந்து கிடப்பதால் அதிலும் விபத்து ஏற்பட்டு வருகின்றன.

இந்த சாலையில் திறந்து கிடக்கும் கால்வாயில் குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருகிறது.இதனால் அந்த சாலை சேதமாகி விபத்து ஏற்பட்டு வருகிறது.

விபத்து ஏற்பட்ட பிறகு போக்குவரத்து துறையினர் அவசரகதியில் அங்கு கன ரக வாகனம் செல்லத்தடை என எச்சரிக்கை பதாகை வைத்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாததால் பல உயிர்கள் போவதாகவும், நெடுஞ்சாலைத்துறையினர் சேதம் அடைந்து கிடக்கும் இந்த சர்வீஸ் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கலை.ரா

எட்டு வழிச்சாலையை எதிர்க்கவில்லை : டெல்லியில் மீண்டும் எ.வ.வேலு

திருமகன் ஈவெரா மரணம்: தலைவர்கள் இரங்கல்!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *