மணிப்பூரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன் தினம் வெளியான வீடியோ ஒன்றில் இரண்டு குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற காட்சிகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் மணிப்பூரில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட எவர்சில்வர் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒத்தக்கடையில் உள்ள யானைமலை மேல் அமர்ந்து இன்று (ஜூலை 21) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த போராட்டத்தில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.
அவர்கள், “மணிப்பூர் மாநிலத்தில் குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்த நபர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்.
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்ற சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும்.
தமிழக அரசின் சட்டப்பேரவையில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசை கண்டித்தும், மணிப்பூர் ஆளுநர் அனுஷியா உய்கேவை கண்டித்தும் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சம்பவத்தை மறைக்க முயன்ற அதிகாரிகள் காவல்துறையினர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்ற பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்தியா – இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
காவிரி நீர்… மத்திய அமைச்சரை சந்தித்தும் பலனில்லை: துரைமுருகன்