செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கியூட் முதுகலை நுழைவுத் தேர்விற்கு மதுரையைச் சேர்ந்த மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பிற்காக கியூட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நுழைவுத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.
தேர்விற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் இணையதள முகவரியை இன்று (ஆகஸ்ட் 29) காலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
அதில் இருந்து, நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தங்களது ஹால்டிக்கெட்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகிறார்கள்.
இதில் மதுரையைச் சேர்ந்த லோகேஷ்வர் என்ற மாணவர் திருவாரூர் பல்கலைகழகத்தில் முதுகலையில் சேர்வதற்காக கியூட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பித்திருந்தார்.
இன்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து பார்த்து லோகேஷ்வருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மத்திய உயர் கல்வித்துறை செயலாளர் சஞ்சய் மூர்த்திக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழகத்திலிருந்து எத்தனை மாணவர்கள் லட்சத்தீவில் தேர்வு எழுதுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை.
மாணவர்களுக்குத் தேர்வு எழுதுவதைவிடத் தேர்வு மையத்திற்குச் செல்வதைக் கடினம் என்ற நிலையை உருவாக்காதீர்கள்.
எனவே, மாணவர்கள் எந்த கடினமும் இல்லாமல் அமைதியாகவும், சவுகரியமாகவும் தேர்வு எழுத வேண்டும். ஆகையால் தயவுசெய்து தேர்வு மையங்களை மாற்றியமைக்க வேண்டும்”.
மோனிஷா