மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் போலீசார் கொலை வழக்கில் இன்று (ஜூன் 21) கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கெனவே கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் கூட்டாளியாக இருந்த விருது நகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் தனியாகப் பிரிந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு செல்வம் அழைப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு செந்தில் சென்றுள்ளார். ஆனால் அதன்பின்னர் எந்த தகவலும் இல்லை.
இதனையடுத்து செந்திலின் மனைவியான முருகலட்சுமி தனது கணவரை காணவில்லை என விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கில் அதன் பேரில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
காணாமல் போன செந்தில் குமாரின் கடைசி செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரித்ததில் அவர் வரிச்சூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் பேசியது தெரிய வந்தது.
இதனையடுத்து அருப்புக்கோட்டை ஏஎஸ்பி கருண் கரட் தலைமையிலான போலீசார் மதுரையில் வைத்து வரிச்சூர் செல்வத்தை இன்று கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது சென்னையில் வைத்து வரிச்சூர் செல்வம் தனது கூட்டாளிகளுடன் சேர்த்து செந்திலை கொலை செய்தததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா