மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஒருவயது ஆண் குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக ஆணுறுப்பில் செய்துள்ளதாக குழந்தையின் தந்தை போலீசில் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவமனை டீன் ரத்தினவேல் இன்று (நவம்பர்24) விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அஜித்குமார் – கார்த்திகா தம்பதியர். இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
அப்போது, குழந்தைக்கு மூச்சு குழாயில் சுவாச பிரச்சனை இருந்ததாக கூறி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கடந்த ஆண்டு நவ.2 ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காவல்நிலையத்தில் புகார்!
பின்னர் ஒருவருடம் கழித்து சமீபத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தையை அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தந்தை அஜித்குமார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள E4 காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ”நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய ஆபரேஷன் தியேட்டருக்கு என் குழந்தையை கொண்டு சென்றனர்.
ஆபரேஷன் முடிந்து குழந்தையை கொண்டு வந்தபோது நாக்கிற்கு பதிலாக ஆணுறுப்பில் ஆபரேஷன் செய்திருந்தனர். உடனே இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது மீண்டும் குழந்தையை ஐசியூவுக்கு கொண்டு சென்று நாக்கில் ஆபரேசன் செய்தனர்.
ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு டாக்டர்கள் சரியான பதிலை கூறவில்லை. என் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் டாக்டர்கள்தான் பொறுப்பு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
சமீபத்தில் சென்னை அரசு மருத்துவமனையில் தவறுதலாக சிகிச்சை அளிக்கப்பட்டு விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனை மீது அஜித்குமார் கொடுத்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தை நன்றாக இருக்கிறது!
இந்நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், அறுவை சிகிச்சைத் துறைத்தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து இன்று அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளனர்.
அதில், “ கடந்த ஆண்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தபோது வாயில் நீர்க்கட்டியுடன் மூச்சுத்திணறல் இருந்தது. இதனால், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு 3 ஆம் நாளில் (2/11/2021) வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பின்னர் குழந்தையின் நாக்கு ஒட்டிக்கொண்ட நிலையில், ஒருவருடம் கழித்து ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பலகட்ட பரிசோதனைக்கு பிறகு கடந்த 22ம் தேதி அறுவை சிகிச்சை செய்தோம். அப்போது குழந்தைக்கு சிறுநீரக பிரச்னை இருப்பது தெரிந்தது.
மற்றொரு மயக்கமருந்து செலுத்துவதை தவிர்ப்பதற்காகவே நாக்கில் செய்யப்பட்ட அதே அறுவை சிகிச்சையில் ஆணுறுப்பில் சிறிய அளவிலான ஆபரேசன் செய்யப்பட்டது. இதில் எந்த தவறும் நடக்கவில்லை.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, குழந்தை தற்போது நன்றாக உணவருந்தி சாதாரணமாக சிறுநீர் கழிக்கிறது.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும் சந்தேகங்கள்!
மருத்துவத்துறையில் பொதுவாக எந்த ஒரு சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சையாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால், அதுகுறித்து அறிக்கையில் எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் குழந்தை ஆணுறுப்பில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் ஐசியூக்கு எடுத்துச்சென்று நாக்கில் அறுவைசிகிச்சை செய்ததாக பெற்றோர் தரப்பில் கூறும் புகாருக்கும் மறுப்பு தெரிவிக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரை சென்றுள்ளது. மேலும் மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவும் குழந்தைக்கு அளிக்கப்பட்ட அறுவைசிகிச்சை குறித்து விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வில்லியம்சன் – போக்லே : ட்ரெண்டாகும் விறுவிறு விருந்து!
ஜல்லிக்கட்டு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!