மதுரையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
பொதுவாக மதுரை என்றால் எல்லோருக்கும் சுட்டெரிக்கும் வெயில் தான் நியாபகத்திற்கு வரும். அப்படிப்பட்ட மதுரையில்தான், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால், கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.
மூன்றுமாவடி, கோரிப்பாளையம், ஒத்தக்கடை, கோ.புதூர், தல்லாகுளம் போன்ற பகுதிகளில் அக்டோபர் 20 மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில இடங்களில் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 22) இரவும் மதுரை பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் மிகக் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மேலும் ஆணையூரில் பெய்த மழையால், அப்பகுதியிலிருக்கும் உழவர் சந்தைக்குள் மழைநீர் புகுந்ததால், அங்கிருந்த காய்கறிகள் மழைநீரில் மூழ்கின. மழைநீர் தேங்கியதற்குக் காரணம் வாய்க்கால்கள் சரியாக தூர்வாராததுதான் என்று மதுரை மக்கள் கூறுகிறார்கள்.
இந்திரா நகர்ப் பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடல் நகரிலும் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கஷ்ட்டபட்டதால் படகுகளின் மூலம் மீட்கப்பட்டனர்.
வாய்க்கால்கள் சரியாகத் தூர்வாரப்படாவிட்டால் மதுரையில் இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஜெமிமா தந்தை மீதான மதப்பிரச்சார குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – மும்பை ஜிம்கானா தலைவர்
கோவை மாமன்ற கூட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் வாக்குவாதம்!
வயநாட்டுக்கு இரு எம்.பி.க்கள் : பிரியங்காவை ஆதரித்து ராகுல் பேச்சு!