முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரிக்கக்கோரி மதுரையில் தபால் தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் இன்று (மே 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை மூலம் தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளும், மக்களும் பெரும் வகையில் பயன்பெற்று வருகின்றனர். இந்த அணை கேரள மாநில எல்லை பகுதியில் இருந்தாலும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவு 15.5 டிஎம்சி ஆகும். அணையின் நீர்மட்டம் 155 அடியாகும். தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் முக்கியமான முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணைக்கு மாறாக புதிய அணை கட்ட வலியுறுத்தி கேரள அரசு மத்திய அரசிடம் மனு அளித்திருந்தது. இந்த அணை தொடர்பான நிபுணர் குழு கூட்டம் இன்று (மே 28) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து, முல்லை பெரியாறு அணைக்கு மாறாக புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்கக்கோரி நேற்று (மே 27) தேனி மாவட்டத்தில் இருந்து 5 மாவட்ட விவசாயிகள் முல்லை பெரியாறு அணை நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால், தமிழக எல்லை காவல்துறையினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, இன்றும் (மே 28) இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்டம் தல்லாகுளம் தபால் தந்தி அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதிகோரிய கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த மூன்று நாட்கள்… ஷாக் கொடுத்த வானிலை மையம்!
ஊரக வளர்ச்சித்துறை… சாதனைகளை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!