சவுக்கு சங்கரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று (மே 20) உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு உள்பட 7 வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், சவுக்கு சங்கர் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார்.
முதலில் அவரை கைது செய்ய சென்றபோது, தேனியில் சவுக்கு சங்கரின் கார் மற்றும் அவர் தங்கியிருந்த விடுதி அறையில் கஞ்சா வைத்திருந்ததாக, தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்த தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு நீதிபதி செங்கமல செல்வன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்பதால், மருத்துவ பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் பெற்று வர நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து சவுக்கு சங்கரை மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை இரண்டு நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையின் போது சவுக்கு சங்கர் தனது வழக்கறிஞரை மூன்று முறை சந்திக்கவும் அனுமதி அளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடை மழை வெளுக்கப் போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து: பின்னணியில் இஸ்ரேலா?