உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா தொடங்கியது முதல் ஒவ்வோர் நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மதுரையை சித்திரை முதல் ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மீனாட்சியும், ஆவணி முதல் சித்திரை மாதம் வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரரும் ஆட்சி செய்வதாக நம்பிக்கை உண்டு.
மதுரையின் அரசியாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மனுக்கு முடிசூட்டும் விழா நடைபெற்றது.
பின்னர் மே 1ம் தேதி அன்று திக் விஜயமும், நேற்று (மே 2) காலை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருகல்யாணமும் கோலாகலமாக நடைபெற்றது.
தொடர்ந்து சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 3) நடைபெறுகிறது. இதற்காக இன்று காலை 5 மணி முதல் 5:45 மணிக்குள் மேஷ லக்னத்தில் அம்மனும் சுவாமியும் தேருக்கு எழுந்தருளினர்.
பூஜைகள் முடித்து 6:30 மணி அளவில் தேர் புறப்பட்டது.பெரிய தேரில் சுந்தரேசுவரர் – பிரியாவிடையும், சிறிய தேரில் மீனாட்சியும் வலம் வருகிறார்.
கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி என நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் மதுரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இடையே தேர் அசைந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மோனிஷா