மதுரை கள்ளழகர் கோயிலில் இன்று (அக்டோபர் 1) ஏற்பட்ட தீ விபத்தில் சுவாமி படங்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
மதுரையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று கள்ளழகர் கோயிலும் ஒன்று. இக்கோயிலில் கடந்த நாட்களாக நவராத்திரி விழா சிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 1) இரவு சுமார் 7 மணியளவில் அக்கோயிலின் பொருட்கள் பாதுகாப்பு அறையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு, தீவிபத்து ஏற்பட்டது.
அந்த அறையில் தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இது சம்பந்தமாக மதுரை அப்பன் திருப்பதி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை மேலூரிலிருந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தீவிபத்தால், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் புகைமூட்டத்தில் சூழ்ந்துள்ளன. பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த தீவிபத்தில் அந்த அறையில் இருந்த சுவாமியின் படங்கள் அனைத்தும் எரிந்து தீக்கிரையாகியுள்ளன.
கோயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பக்தர்கள் ஒருவித அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுதொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்
மேயரைப் பற்றி ஆபாச வீடியோக்கள்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
ஆர்.நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!