விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (மே 10) உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தல் தொடர்பாக போலீஸில் புகார் அளித்ததற்காக கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பணியில் இருந்த போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
பணியில் இருந்த அரசு ஊழியர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஏஓ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் டிஎஸ்பி சுரேஷ் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நெல்லையை சேர்ந்த பொன் காந்திமதிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “மணல் கடத்தல் கும்பலால் விஏஓ லூர்து பிரான்சிஸ் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
முறப்பநாடு காவல்துறையினர் மணல் கடத்தல் கும்பலிடம் இருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு மணல் கடத்தலை தடுக்காமல் இருந்துள்ளனர்.
எனவே லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை காவல்துறையினர் விசாரித்தால் உண்மை வெளிவராது. ஆகையால், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (மே 10) நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது விஏஓ கொலை வழக்கின் விசாரணை விவரங்கள் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உத்தரவிட்டனர்
மேலும், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி ஒரு மாதத்திற்குள் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
மோனிஷா
கர்நாடகா தேர்தல்: பிரகாஷ் ராஜ் வேண்டுகோள்!
’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை: உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பாளர் மனு!