நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்யானந்தா: நீதிமன்றம் கண்டனம்!

தமிழகம்

நித்யானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (அக்டோபர் 22) தெரிவித்துள்ளது.

பாலியல் வழக்கில் சிக்கி போலி சாமியார் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். கைலாசா என்ற இடத்தில் இருப்பதாக நித்யானந்தா கூறும் நிலையில், அவர் எங்குதான் இருக்கிறார் என்று இதுவரை தெரியவரவில்லை.

இந்தநிலையில், கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த நித்யானந்தாவின் பெண் சீடர் சுரேகா, முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தேனி மாவட்டம் சேத்தூர் காவல் நிலையத்தில் என் மீதும் தர்மலிங்கம், ரதி ஆகியோர் மீதும் மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கில் கணேசன் என்பவருக்கு சொந்தமான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள 45 ஏக்கர் நிலத்தை நித்யானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாகவும் நான்கு பிரிவின் கீழ் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் நாங்கள் அதுபோன்று எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பொய்யான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்படுவோம்” என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் இன்று (அக்டோபர் 22) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஷ்ணு ஆஜராகி “சுரேகா நிலத்தை அபகரிக்கும் எந்தவித செயல்களிலும் ஈடுபடவில்லை. இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என புகார் தாரர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,“இடத்தின் உரிமையாளர் கணேசன் ஏற்கனவே நித்யானந்தா வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக உள்ளார். மைசூரில் உள்ள ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

நித்யானந்தாவின் சீடர்கள் கணேசனை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடுவதால் இவர்களுக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பரத சக்ரவர்த்தி, “நித்யானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு இந்தியன் ஜூடிசியல் சிஸ்டத்தையே சேலஞ்ச் செய்கிறார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது. எனினும் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. ஆனால், அவரது சொத்துக்களை இந்தியன் ஜூடிசியல் பாதுகாக்க வேண்டுமா” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் மனுதாரர் வழக்கறிஞர் என்பதால் இந்த இட விவகாரத்தில் இனி தலையிட மாட்டேன் என உத்தரவாத பத்திரம் நாளை (அக்டோபர் 23) தாக்கல் செய்ய வேண்டும். அப்படியானால் அவருக்கு முன் ஜாமீன் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி பரத சக்ரவர்த்தி.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நாளை வெளியாகும் ‘அமரன்’ டிரெய்லர்!

இவர்களை ஏன் தவிர்க்க வேண்டும்… இர்பானால் நொந்த பெண் டாக்டர்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *