“சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. ஆகவே, இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்” என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அதில், “தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன.
இரவில் மது போதையில் வாகனத்தில் செல்வோரால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. தமிழகத்தில் 21 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.
கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்க வேண்டும்.
மதுபான பாட்டில்களில் அதில் கலந்துள்ள பொருட்கள் மற்றும் தயாரிப்பாளர் விபரங்களை தமிழில் குறிப்பிட வேண்டும்.
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்” என அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பான புகைப்படங்கள் வழங்கப்பட்டன.
அதனைப் பார்த்த நீதிபதிகள், “இது போன்ற வழக்கைத் தொடர்ந்த மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.
சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்குச் சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை.
இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்” என எச்சரித்த நீதிபதிகள்,
மனுதாரர் தொடர்ச்சியாக இந்த வழக்கு தொடர்பான விபரங்களைத் திரட்டவும், அரசுத்தரப்பில், இது தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்கவும் உத்தரவிட்டதுடன், வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
ஜெ.பிரகாஷ்