பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன்… உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

தமிழகம்

சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஆகஸ்ட் 30) தீர்ப்பளித்துள்ளது.

“பழமையான சிலைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட வழக்கில், பழிவாங்கும் நோக்கில் பொன் மாணிக்கவேல் தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். எனவே சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி காதர் பாட்சா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொன் மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேல், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ” என் மீதான வழக்கை டிஐஜி அந்தஸ்த்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ-யின் எஸ்.பி வழக்குப்பதிவு செய்துள்ளார். இது ஏற்கத்தக்கதல்ல, சட்டவிரோதமானது.

இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக நேற்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்மாணிக்கவேல் தரப்பில், தனது பணிக்காலத்தில் ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என்றும் தன் மீதான குற்றச்சாட்டிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிபிஐ தரப்பில், “உயர்நீதிமன்ற உத்தரவின்படியே பொன் மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை சிபிஐ அலுவலகத்தில் நான்கு வாரங்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி பரதசக்கரவர்த்தி இன்று தீர்ப்பளித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“முதலீட்டுக்கான ஒரே சாய்ஸ் தமிழ்நாடு” – அமெரிக்காவில் தமிழில் முழங்கிய ஸ்டாலின்

+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *