விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளருக்கு முன் ஜாமீன்!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (அக்டோபர் 6) முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார் குளம் ஊராட்சி கங்கா குளம் பகுதியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வேப்பங்குளத்தை சேர்ந்த விவசாயி அம்மையப்பன் “கிராம சபை கூட்டத்தை ஒரே இடத்தில் நடத்தாமல் சுழற்சி முறையில் வெவ்வேறு கிராமங்களில் நடத்த வேண்டும்.
அப்போது தான் அனைத்து பகுதி பொதுமக்களும் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், சரிவர பணியாற்றாத ஊராட்சி செயலாளர்களை மாற்றம் செய்ய வேண்டும்” என பேசினார்.
விவசாயி அம்மையப்பன் பேச்சால் ஆத்திரமடைந்த பிள்ளையார்குளம் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் தனது இருக்கையிலிருந்து எழுந்து வந்து அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். இதனால் அம்மையப்பன் படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அம்மையப்பனை மீட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அம்மையப்பனை ஊராட்சி செயலாளர் காலால் எட்டி உதைத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. பலரும் தங்கபாண்டியனின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி ஊராட்சி செயலாளர் பதவியிலிருந்து தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தங்கப்பாண்டியன் மீது வன்னியம்பட்டி போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் தலைமறைவான தங்கபாண்டியன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், கிராம சபை கூட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், “கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளது. பொது இடத்தில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் முன்பு கேள்வி கேட்ட விவசாயியை தாக்கியது சட்டம் ஒழுங்கு பிரச்சனை. அதனால் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனுக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்று கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி சிவஞானம், “தாக்குதலுக்குள்ளான விவசாயிக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. இதனால் தங்கபாண்டியனுக்கு முன் ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராகி வெங்காய தோசை
சனாதன பேச்சு: ஆதாரங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!