கோயில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலப்பட்டி கிராமத்தைச் சார்ந்த மாரிச்சாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் வருகிற 8 ஆம் தேதி இரவு கரகாட்ட நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து உரிய அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு அளித்துள்ளோம்.
எனவே கரகாட்டம் நடத்த அனுமதியும் நிகழ்ச்சிக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று (நவம்பர் 5) உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் சில கட்டுப்பாடுகளுடன் கரகாட்டம் நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.
அதன்படி, நிகழ்ச்சியில் ஆபாச நடனம், இரட்டை அர்த்த வார்த்தைகள், அநாகரிகமான வரிகள் உள்ள பாடல்கள் இசைக்கக் கூடாது. நாகரிகமான உடை அணிய வேண்டும்.
எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியைக் குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக் கூடாது.
சாதி மற்றும் சமூகம் போன்றவற்றின் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டாமல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது. நிகழ்ச்சியை இரவு 7:00 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.
விரும்பத்தகாத சம்பவம் ஏதேனும் நடைபெற்றால் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தான் அதற்குப் பொறுப்பாவார்கள். மேலும் கட்டுப்பாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்தவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
மோனிஷா
பிறந்த குழந்தையின் வயிற்றில் 8 சிசுக்கள்!
கே.ஜி.எப். பாடல் : ராகுலுக்கு வந்த சிக்கல்!