மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஆகஸ்ட் 18) உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், “மதுரை பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் வரும் ஆகஸ்ட் 20-ல் அதிமுக மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் மிக அருகில் உள்ளதால் மாநாடு நடைபெறும் நாளில் விமானங்கள் தரையிறங்குவதற்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, விமான நிலைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாராணைக்கு வந்தது.
அப்போது மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ”அதிமுக மாநாட்டுக்கு சுமார் 15 லட்சம் பேர் வருவதாக கட்சியினர் கூறியுள்ளனர்.
விமான நிலையத்தை சுற்றி 20 கி.மீ தொலைவிற்கு உரிய அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விளம்பர பலகைகள் கூட வைக்க கூடாது. பட்டாசும் வெடிக்க கூடாது.
மேலும் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறாமல் விதிகளை மீறி மாநாடு நட்த்துகின்றனர். எனவே, அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.
தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”மாநாடு நடைபெறுவது குறித்து மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் ஏற்கனெவே தெரிவித்துவிட்டோம். அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
அதேபோன்று காவல்துறையிடம் அனுமதி பெற்று உரிய பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. இந்த மனு கடைசி நேரத்தில் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனையடுத்து, ”உரிய ஆதாரங்கள் இன்றி கடைசி நேரத்தில் எப்படி இந்த மனுவை தாக்கல் செய்வீர்கள்? இதில் ஏதேனும் பொதுநலன் உள்ளதா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஓராண்டுக்குள் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்!
அதிமுக பொதுக்குழு எதிரான வழக்கு: தேர்தல் ஆணையம் பதில்!