மதுரையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலா 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விடிஎம் என்ற பட்டாசு ஆலை 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது.
இந்த ஆலையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்று (நவம்பர் 10) மதியம் பட்டாசு ஆலையில் எதிர்பாராத விதமாக மருந்துகள் உராய்ந்து வெடி விபத்து ஏற்பட்டது.
பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் கட்டடம் முழுவதும் தரைமட்டமாகின. இந்த விபத்தில் அம்மாசி, வல்லரசு, கோபி, விக்கி, பிரேமா ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு வேதனையடைந்தேன்.
செய்தி அறிந்தவுடன் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி-யை மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்துக்குத் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில மணி நேரத்திற்கு முன்பு தான் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மோனிஷா