கரூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (மார்ச் 13) தடை விதித்துள்ளது. Madurai court verdict Ban
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா நெரூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலில் நடைபெறும் ஜீவ சமாதி தினத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இதனை தொடர்ந்து எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள்.
இந்த நடைமுறைக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கரூரை சேர்ந்த நவீன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் “அங்கப்பிரதட்சணம் செய்வது அவரவர் அடிப்படை உரிமை. அதை தடை செய்வது வழிபாட்டு உரிமையை மீறுவதாகும். எனவே, ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வு விசாரித்து வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், “உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் உத்தரவு பிறக்கும் வரை, கரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. சமுதாயத்தில் எந்த ஒரு பழக்க வழக்கமும் பொது நடைமுறைக்கு எதிராக இருக்கக்கூடாது. இது அரசியலமைப்புக்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளனர்.
எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு எதிரானது. அவர் நீதிபதியாக தொடர்வது சரியல்ல என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டுக்கு திராவிடர் விடுதலை கழக தலைவர் கெளத்தூர் மணி கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. Madurai court verdict Ban