கடந்த மூன்று நாட்களாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்மீக கிளாஸ் எடுத்த மகா விஷ்ணு வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலான அதேவேளையில், விஜய் டிவியின் காமெடி முகமாக அறியப்படும் ராமர் மதுரை புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட விவகாரம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.
தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மதுரை புத்தக திருவிழா, தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 6-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவானது செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 200 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணியிலிருந்து 9 மணி வரை புத்தக பிரியர்களுக்காகவே எழுத்தாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் ஐ.லியோனி, மருத்துவர் கு.சிவராமன், ஞானசம்பந்தம், சாலமன் பாப்பையா, மனுஷ்ய புத்திரன், பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியின் காமெடி நடிகர் ராமரும் செப்டம்பர் 14 ஆம் தேதி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது.
‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று லேடி கெட்டப்பில் ராமர் நடித்த காமெடி காட்சியை பார்க்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் ராமர். ‘ஆத்தாடி என்ன உடம்பு’ என்ற பாடலை ரீமிக்ஸ் செய்து ராமர் பாடிய பாட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஃபேவரிட் ஆனது. இவருக்காக விஜய் டிவியில் சகல Vs ரகள, ராமர் வீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ராமர் பிஸியாக தற்போது நடித்து வருகிறார்.
இந்தசூழலில் தான் புத்தக திருவிழாவுக்கு ராமர் அழைக்கப்பட்ட விவகாரம் சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
“இரட்டை அர்த்த வசனத்தில் பேசும் காமெடி நடிகரையெல்லாம் புத்தக விழாவில் மேடையேற்றலாமா? மதுரையில் பேச்சாளர்களுக்கு என்ன பஞ்சமா?” என்று சோஷியல் மீடியாக்களில் ராமருக்கு எதிராக எழுத்தாளர்களும், விமர்சகர்களும் கருத்துக்கள் பதிவிட்டனர்.
அதேவேளையில், “அரசியல் மாநாடுகளில் கூட்டத்தை கலையாமல் தக்கவைப்பதற்கு தான் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதே மாதிரி தான் ராமர் போன்றவர்களால் 10 பேர் புத்தகக் கண்காட்சிக்கு வந்து புத்தகம் வாங்கினாலே நல்லது தான்.
மகா விஷ்ணு போன்றவர்களை பள்ளிகளுக்கு அழைத்து மோட்டிவேஷன் ஸ்பீச் கொடுப்பதற்கு பதிலாக, ராமர் போன்றவர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தப்பு?
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக ராமர் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி கல்லூரி விரிவுரையாளர். புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டவர், அதனால் ராமரை அழைப்பதில் என்ன பிரச்சனை?” என்று அவருக்கு ஆதரவான குரல்களும் சமூக வலைதளங்களிலும் எதிரொலிக்கிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே, சோஷியல் மீடியாக்களில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிகாரிகள் கூறும்போது, “ராமர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் மிகவும் புகழ்பெற்றவர். அதனால் தான் அவரை அழைத்திருக்கிறோம். அவருக்கு மட்டும் நாங்கள் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தரவில்லை. பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசியதற்கு பிறகு சிறிது நேரத்திற்கு அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் எதிர்ப்புகள் வலுத்ததால், மதுரை புத்தக திருவிழாவில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து ராமரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது, மேலும், அவரின் புகைப்படம் போஸ்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ராமர் தரப்பில் இன்னும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. அவரது எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் செய்யபப்பட்டிருந்தது.
புத்தகக் காட்சி மேடைகளில் வாசகர் என்ற முறையில் ராமர் பேசக் கூடாதா? ஒருவேளை ஏற்கனவே பல மேடைகளில் பேசி, அறியப்பட்ட எழுத்தாளர்கள் மட்டுமேதான் பேச வேண்டுமா? ஒருவேளை மேலிட செல்வாக்கு வேண்டுமா? இப்படிப்பட்ட கேள்விகள் தொடர்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்? – ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கேள்வி!
வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் கவலைக்கிடம்!