கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மதுரை கள்ளழகர் தேரோட்டம் இன்று (ஆகஸ்ட் 12) வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரையில் சித்திரை திருவிழா போன்று அழகர் கோயில் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. கள்ளழகர் கோயிலானது, 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இக்கோயிலானது அழகர் மலையில் அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி, கொடியேற்றத்துடன் ஆடித்திருவிழா தொடங்கியது 10ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 12) தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டமானது, காலை 6.30 மணிக்கு தொடங்கியது. அழகர் கோவிலின் தேரடி மண்டபத்தில் தொடங்கிய தேரானது, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி சந்திப்பில் தேர் திரும்பி மீண்டும் தேரடி திடலுக்கு வந்தது. பழமை வாய்ந்த திருத்தேரில் கள்ளழகர், ஸ்ரீ தேவி- பூ தேவி அம்மையார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர். 2 டன் மலர்களால் அழகரின் திருத்தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை 18ஆம் படி கருப்பண்ணசாமி கோயிலில் கதவுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் 18ஆம் படி கருப்பண்ணசாமி கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு, சாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட எஸ்.பி சிவபிரசாத் தலைமையில் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தேரடி வீதி பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்க்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் தேரோட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
செல்வம்