madurai aiims s venkatesan protest

மதுரை எய்ம்ஸ்: கல்லூரியை பார்க்காமலே பட்டம் பெறும் மாணவர்கள்! – சு. வெங்கடேசன்

தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்காமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் 2026 அக்டோபரில் கட்டுமானப் பணி நிறைவடைந்துவிடும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இதுவரை நடைபெறாமல் இருந்து வருகிறது.

இதனால் மாநில அரசு மற்றும் பிற அரசியல் கட்சிகள் மத்திய அரசின் மீது தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமானதை கண்டித்தும், வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தியும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் மாபெரும் போராட்டம் நாளை (ஜனவரி 24) நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அதுகுறித்து பேசுவதற்காக மகபூப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் எம்.பி. சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசுகையில், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018 டிசம்பரில் அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து அறிவிக்கப்பட்ட தொகை ரூ.1264 கோடி. பின்னர் 150 படுக்கை கொண்ட புதிய பிரிவை உருவாக்குவதற்காக மறுமதிப்பீடு செய்து ரூ.1,977 கோடியாக நிதி உயர்த்தப்பட்டது.

அப்படியெனில், ஒரு படுக்கைக்கு 4.74 கோடி ரூபாயா?. இதில் 1,627 கோடி ரூபாயை ஜெய்கா நிறுவனம் கடனாக வழங்கும் நிலையில், வெறும் 350 கோடியை ஒதுக்குவதில் என்ன சிக்கல்?

ஒன்றிய அரசின் அலட்சிய போக்கும், நிர்வாக குழப்பமும் தான் இதற்கு காரணம். தமிழகத்திற்கான திட்டங்களைப் பாரபட்சத்துடன் பார்ப்பதும், மக்களை வஞ்சிக்கும் அரசியலின் ஒரு பகுதியாகவுமே இதை பார்க்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்தைத் துவங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு 17 முறை அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. இருந்தும் மக்களுக்கான அநீதியை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

தற்போது 2.5 கோடி மதிப்பில் நிர்வாக கட்டிடம் கட்டப்படும் என அறிவித்திருப்பதும் கண்துடைப்பு தான். ஒன்றிய அரசின் நிர்வாக குழப்பங்களால் தான் ஜெய்கா நிறுவனம் வழங்க வேண்டிய கடன் தொகையைக் கூட இதுவரை வழங்காமல் உள்ளது.

ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 2026ல் பட்டம் பெற்று வெளியேறும் போது கூட அவர்கள் பயின்ற கல்லூரியை அவர்களால் பார்க்க முடியாது. தாம் பயின்ற கல்லூரியையே காணாமல் பட்டம் பெற்று வெளியேறுபவர்கள் மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் மட்டும் தான்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தொகையை முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 10,000 பேர் பங்கேற்கும் மாபெரும் முழக்கப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில், 3 எம்பிக்கள் மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்பில் நடைபெறவுள்ளது” எனப் பேசினார்.

மோனிஷா

நில அபகரிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சருக்கு முன்ஜாமின் ரத்து!

’பிரைம் ஏர்’ : விமானச் சேவையை அறிமுகப்படுத்திய அமேசான்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.