மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 63 வயது முதியவருக்கு 8 மணிநேரத்தில் 3 சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் மல்லப்புரத்தை சேர்ந்தவர் 63 வயதான சேகர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேகருக்கு இருதய பாதிப்பு, இரத்தக்குழாயில் ஓட்டை, இரத்தக்குழாய் தமனி வீக்கம் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்தனர்.
இந்நிலையில், முதியவர் சேகருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.20 லட்சம் வரை செலவாகும் எனவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் அவர் உயிருடன் இருப்பதற்கான உத்தரவாதம் தர முடியாது எனவும் சேகர் மகன் அன்பரசனிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னர், சேகர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இருதய நெஞ்சக அறுவை சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
மேலும், இரத்தக்குழாய் வீக்கம் கழுத்து வரை வளர்ந்ததோடு, இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ஸ்டென்டு பொருத்துவதற்கான அவசியமும் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 10) இருதய அறுவை சிகிச்சை குழு, மயக்க மருந்தியல் குழு இணைந்து சேகருக்கு கழுத்துப்பகுதியில் பைபாஸ் அறுவை சிகிச்சை, இருதய ஸ்டென்ட் சிகிச்சை, மகாதமனி அறுவை சிகிச்சை ஆகிய 3 அறுவை சிகிச்சையையும் ஒரே முறையில் 8 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 11) செய்தியாளிடம் பேசிய மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை முதல்வர் தர்மராஜ், “63 வயதான சேகர் என்பவருக்கு இருதய பாதிப்பு, இரத்தக்குழாய் தமனி வீக்கம், இரத்தக்குழாயில் ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டது.
நேற்று இவருக்கு 8 மணி நேரம் 3 சிக்கலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிவில் சேகர் நலமுடன் உள்ளார். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்களுக்கும் பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜூன் 20 சட்டமன்றம் கூடும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
மத்திய இணையமைச்சராக எல்.முருகன், சுரேஷ் கோபி பொறுப்பேற்றனர்!