மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வி.கே.டி.பாலன் இன்று (நவம்பர் 11) உடல்நலக்குறைவால் காலமானார்.
திருச்செந்தூரை பூர்வீகமாகக் கொண்ட வி.கே.டி.பாலன், 1981-ஆம் ஆண்டு சென்னை வந்தார். முதலில் சிறு சிறு வேலைகள் செய்து வந்த வி.கே.டி.பாலன், 1986-ஆம் ஆண்டு மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார்.
இந்த தொழிலில் பல்வேறு சவால்களை சந்தித்த வி.கே.டி.பாலன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக அந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது டிராவல்ஸ் நிறுவனம் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்தது. தமிழ் தேசிய ஆதரவாளரான இவர், தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்தநிலையில், பக்கவாதத்தால் வி.கே.டி.பாலன் இன்று சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை (நவம்பர் 12) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. தொழிலதிபரான வி.கே.டி.பாலன் மறைவு மதுரா டிராவல்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் தமிழ்தேசிய ஆதரவாளர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், “இந்தியாவின் முன்னணி பயணத்திட்ட முகவரும் மதுரா நிறுவன உரிமையாளருமான வி.கே.டி.பாலன் மறைவுச் செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து தன் உழைப்பின் மூலமாக முன்னேறி சுற்றுலா பயணத்திட்ட சேவைத் துறையிலும் பொருளாதாரத்திலும் உச்சம் தொட்ட தன் வாழ்க்கை அனுபவங்களை தற்போதைய இளைய தலைமுறைக்கு தன் பேச்சின் மூலமும் எழுத்தின் மூலமும் நம்பிக்கையூட்டி வந்த அவரது இறப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், மதுரா டிராவல்ஸ் நிறுவன பணியாளர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசியமும் திராவிடமும் பிரித்து பார்க்க முடியாதவை… அப்பாவு போட்ட போடு!
நிலத்தை கையகப்படுத்துவீர்களா? ஆட்சியரை விரட்டியடித்த கிராம மக்கள்!