ஜாபர் சாதிக் மீதான அமலாக்கத்துறை வழக்கில், இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஜாபர் சாதிக்கிற்கு ஏழு நாட்கள் போலீஸ் கஸ்டடி வழங்கப்பட்டது.
இந்தநிலையில், 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, சகோதரர் முகமது சலீம், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் அமீர் 12-ஆவது நபராக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக்கின் சட்டவிரோதமான பணத்தை அமீர் கையாண்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜாபர் சாதிக்கின் சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் சொத்துக்களையும் முடக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை வைத்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெஷாவருக்கு பதிலாக கராச்சிக்கு சென்ற விமானம்… ஐரோப்பிய வான்வெளியில் பாக். ஏர்லைன்ஸ் தடை பின்னணி!