அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் : உயர் நீதிமன்றம்!

Published On:

| By Kavi

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், “20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சிறைத்துறை டிஜிபி தலைமையிலான மாநில குழுவிடம் மனு அளித்துள்ளேன். இதே குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார். என்னை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை என்னை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான அனுமதியை வழங்கி அந்த பரிந்துரை தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் என்னை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிராகரித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை  இன்று (அக்டோபர் 17) விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம், பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டினர்.

அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். அதை மீற முடியாது, ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள்,  முன் கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவை ரத்து செய்தனர்.

மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரிந்துரையை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டு  வீரபாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

தயாராகிறதா ‘கஜினி – 2’?

ஓசி சிகரெட் கேட்டு தாக்குதல் : கைதானவர்களுக்கு மாவுகட்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel