ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
76-வது சுதந்திர தினம், விஜயதசமி, அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் அக்டோபர் 22,29 ஆகிய தினங்களில் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்ட இடங்களில் நிபந்தனையுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
காவல்துறை தரப்பில், “ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வழக்கு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அவசியமில்லை” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் தரப்பில், “மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதனால் இந்த மனுவை இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி அளிக்காதது அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் ஓபிஎஸ்: திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்!
அனுமதியின்றி கொடி ஏற்ற முயன்ற பாஜகவினர் கைது!
“நான்தான் மதுரை ஆதீனம்”: நீதிமன்றத்தில் நித்தியானந்தா புது மனு!
தீபாவளி பண்டிகை: நவம்பர் 5ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும்!