“உத்தரவு பிறப்பித்த பிறகு மீண்டும் எப்படி விசாரிக்க முடியும்?” ஜாபர் சேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தமிழகம்

தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், கடந்த 2020ம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஜாபர் சேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், சிவஞானம் அடங்கிய அமர்வு ஆகஸ்ட் 21-ஆம் தேதி வழக்கை ரத்து செய்வதாக நீதிமன்ற அறையில் அறிவித்தது.

பின்னர், சில விளக்கங்கள் வேண்டும் என ஆகஸ்ட் 23-ஆம் தேதி வழக்கை மீண்டும் பட்டியலிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜாபர் சேட் தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் ஆஜராகி, “இறுதி உத்தரவு பிறப்பித்த பின்பு மீண்டும் வழக்கை விசாரிக்க முடியாது. உத்தரவின் நகலில் கையெழுத்து போட்டாலும் போடாவிட்டாலும் மீண்டும் விசாரிக்க முடியாது. அப்படி விசாரிக்க வேண்டும் என்றால் இருதரப்பிற்கும் நோட்டீஸ் கொடுத்த பின்பே விசாரிக்க வேண்டும்.

ஜாபர் சேட் மீதான வழக்கை ரத்து செய்வதாக அறிவித்த பின்பு மீண்டும் விசாரிப்பதனால் வழக்கு தொடர்ந்தவரின் நிலை என்ன? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை என்னவாகும்?

இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும். இணையதள பதிவுகளில் உத்தரவு விவரம் நீக்கப்பட்டு குளறுபடிகள் நடந்தது குறித்து விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதியிடம் மெமோ தாக்கல் செய்துள்ளோம். அதேபோல,  உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளோம்.

எனவே, இந்த வழக்கை இதே அமர்வு மீண்டும் விசாரிக்க கூடாது. நீங்கள் எதையோ மனதில் வைத்துக் கொண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளீர்கள்” என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ஒரு உத்தரவை திரும்ப பெறுவதற்கான அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லையா? உத்தரவில் நாங்கள் கையெழுத்திடவில்லை. உத்தரவில் திருப்தி இல்லை என்றால் அந்த வழக்கை தன்னிச்சையாக மீண்டும் விசாரிக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்தனர்.

அமலக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “இந்த வழக்கில் இறுதி வாதம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறானது. தொழில்நுட்ப காரணங்களுக்காகவே ஜாபர்சேட் மீதான மூல வழக்கு ரத்து செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை” என்று வாதிட்டார்.

இதனை தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பட்டப்பகலில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் : எஸ்.பி விசாரணை!

”ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையில் உடன்பாடு இல்லை”: நீதிபதி சுப்பிரமணியன்

+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *